இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மொஹாலியில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 ஆட்டத்தில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸி. நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை இந்தியா 19.1 ஒவர்களில் விரட்டியது.
இந்திய அணி வழக்கம் போல துவக்க வீரர் ஷிகர் தவானை 13 ரன்களுக்கு இழந்தது. அடுத்து களமிறங்கிய கோலி, தான் சந்தித்த 2-வது மற்றும் 3-வது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரெய்னாவும் 10 ரன்களுக்கு வெளியேற இந்திய அணி 8 ஓவர்களில் 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
யுவராஜ் சிங் - கோலி இணை சிறிது நம்பிக்கை அளித்தாலும் தேவைக்கேற்ப ரன் சேர்க்க இருவரும் போராடினர். சிறப்பாக ஆடி வந்த யுவராஜ் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 36 பந்துகளில் 67 ரன்கள், ஓவருக்கு சராசரி 11 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையில் தோனியும் கோலியும் களத்தில் இணைந்தனர்.
15, 16 மற்றும் 17-வது ஓவர்களில், ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்தாலும் தேவைப்படும் ரன்ரேட் இறங்குமுகம் காட்டவில்லை. ஃபால்க்னர் வீசிய 18-வது ஓவர் ஆட்டத்தின் தலைவிதியை மாற்றும்படி அமைந்தது.
18-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கும், மூன்றாவது பந்தை சிக்ஸருக்கும் விளாசிய கோலி அடுத்த 2 பந்துகளில் மேலும் 3 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் தோனி 2 ரன் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர, 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. இந்திய அணியின் மீது இருந்த அழுத்தமும் குறைந்தது.
ஆனால் கோலியின் விளாசல் நின்றபாடில்லை. கோல்டர் நீல் வீசிய அடுத்த ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து மேலும் 16 ரன்கள் தேடித்தர, கடைசி ஓவரில் இந்திய அணிக்கு வெறும் 4 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாயிருந்தது.
20-வது ஓவரின் முதல் பந்தை தோனி பவுண்டரிக்கு விரட்ட, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸி. அணி டி20 உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது.
முடிவில் விராட் கோலி 51 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்திருந்தார், தோனி 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.