ரஜினி மற்றும் அக்ஷய்குமார் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை டெல்லியில் படமாக்க இருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'கபாலி' மற்றும் '2.0' என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. 'கபாலி' படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டாலும், விரைவில் டப்பிங் பணிகள் துவங்கப்பட இருக்கிறது.
ரஜினி, ஏமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தொடர்ந்து ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய டாங்குகள் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் வருவது போல சிலவற்றை படக்குழு படமாக்கியது.
தற்போது அந்த டாங்குகள் எல்லாம் ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு வருவது போலவும், அங்கு பல்வேறு கார்கள் எல்லாம் வைத்து ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியை படமாக்க இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். டெல்லியில் உள்ள மைதானத்தில் இச்சண்டைக் காட்சிகள் நாளை (மார்ச் 17) முதல் துவங்க இருக்கிறார்கள். 40 நாட்கள் நடைபெற இருக்கும் இப்படப்பிடிப்பில் ரஜினி மற்றும் அக்ஷய்குமார் இருவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படம் முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. இந்திய அளவில் 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வரும் முதல் படம் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment