
ரஜினியின் லிங்கா படத்துக்காக முல்லைவனம் 999 கதையை திருடவில்லை என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்த கே.ஆர்.ரவி ரத்தினம் ‘முல்லைவனம் 999 என்ற படக்கதையை யூ டியூப்பில் பதிவேற்றம் செய்திருந்ததாகவும் அந்த கதையை திருடி ரஜினியின் லிங்கா படம் தயாரிக்கப்பட்டுள்ளதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்.குமரன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் டிஜிபி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலை யில், ‘லிங்கா’ திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன்குமரன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை சார்ந்து லிங்கா படத்தின் கதை இருப்பதால், அந்தக்கதை என்னுடையது என மனுதாரர் கூற முடியாது. அவரது கதையை நான் திருடியதாக கூறுவதை மறுக்கிறேன். பென்னிகுக்கின் வாழ்க்கை வரலாற்றுக்கு யாரும் உரிமை கோர முடியாது. லிங்கா படத்தை பொறுத்தவரை இன்னும் கதை முழுமையாக வெளியாகவில்லை. அனைவரும் யூகத்தில்தான் உள்ளனர். அடிப்படை கதை பொன்.குமரனுக்கு சொந்தமானது.
பொன்.குமரன் அவரது கதையை ‘கிங்கான்’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட கதாசிரியர் சங்கத்தில் 15.10.2010ல் பதிவு செய்துள்ளார். மனுதாரர் குறிப்பிட்டது போல நாங்கள் எந்த தவறிலும் ஈடுபடவில்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இதேபோல கதாசிரியர் பொன்குமரனும் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment