Monday, 10 November 2014

ஜட்ஜா போகறீங்களா? சில டிப்ஸ்

இப்ப எல்லாம் எந்த டீவி சேனல் பார்த்தாலும் ரியாலிட்டி ஷோனு ஒண்ணு நடத்தி உயிர வாங்கறானுங்க. அதுலயும் அந்த நிகழ்ச்சிகள்ல வர நடுவர்கள் பண்ற அலும்பு தாங்கல. ஜட்ஜா இருக்குறதுக்கு ஒரே தகுதி பிரபலமா இருக்குறது தான். இப்ப தான் வலைப்பதிவு ரொம்ப பிரபலம் ஆகிட்டு வருதே, இந்த நிலைமைல இங்க நம்ம ஆளுங்களை கூப்பிட்டா, இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு நீங்க ஒதுங்கிடக்கூடாதுனு சொல்லித் தர தான் இந்த பதிவு.


முதல்ல பாட்டுப் போட்டி.

ஒரு பாட்டுப் போட்டிக்கு உங்களை ஜட்ஜா கூப்பிட்டா என்ன எல்லாம் கமெண்ட் குடுக்கலாம்னு பார்க்கலாம்.

1. ”பல்லவி நல்லா இருந்தது. சரணம்ல விட்டுட்டீங்க” இந்த இடத்துல பல்லவி நல்லா இருந்தது, சரண்யாவை விட்டுட்டீங்கனு சொல்லி மாட்டிக்க கூடாது. உங்களுக்கு தெரிஞ்ச ஒரே பல்லவி , சகாதேவன் மகாதேவன்ல S.V. சேகருக்கு ஜோடியா நடிச்சவங்களா இருக்கலாம். அதெல்லாம் வெளிய காட்டிக்க கூடாது

2.“ஸ்ருதி சேரல”. இந்த இடத்துல வடிவேல் ஸ்டைல்ல ”சுரூதி” சேரலனு சொல்லி மாட்டிக்க கூடாது. கொஞ்சம் ஸ்டைலா சொல்லனும்.

3.”டெம்போ இல்லை” - உங்களுக்கு தெரிஞ்ச டெம்போ வீடு காலி பண்றதுக்கு பயன்படுத்துற டெம்போவா இருக்கலாம். திடீர்னு டெம்போ மறந்து போய் “லாரி இல்லை”னு சொல்லிடாதீங்க. அப்பறம் வீட்டுக்கு ஆட்டோ வரும்.

4.“பீட்ட விட்டுட்டீங்க” - பீட்டர் விட்டுட்டீங்க இல்ல. இது Beatஅ விட்டுட்டீங்க. அப்படியே ஸிங் மிஸ் ஆகிடுச்சினும் சேர்த்துக்கலாம்.

5. “பிட்ச் சரியில்லை” - நம்மளுக்கு தெரிஞ்சது க்ரிக்கெட் பிட்ச் மட்டுமா இருக்கலாம். இருந்தாலும் தைரியமா சொல்லுங்க. தப்பி தவறி சேப்பாக்கம் ஸ்டேடியம் பிட்ச் மாதிரி இருக்கணும்னு சொல்லி மாட்டிக்காதீங்க.

இப்படி எதுவுமே சொல்ல தெரியலை. பயமா இருக்குனு ஃபீல் பண்ணீங்கனா, இதை பயன்படுத்துங்க. இது தான் பிரம்மாஸ்திரம்.

ரொம்ப சீரியஸா முகத்தை வெச்சிட்டு கேளுங்க.

“என்ன பாட்டு எடுத்துருக்கீங்க? உங்க ரேஞ்சுக்கான பாட்டே இல்லை இது. I was expecting more from you. You disappointed me" அப்படினு தமிழும் இங்கிலீசும் கலந்து அடிங்க.

இப்ப டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா கூப்பிட்டா.

இதுல ரெண்டு விதம் இருக்கு. ஒண்ணு ஜோடியா ஆடறது. அடுத்து தனியா ஆடறது.

முதல்ல ஜோடியா ஆடறதைப் பார்ப்போம்

1. ”கெமிஸ்ட்ரி சரியில்லை”. உங்களுக்கு பிடிக்காதது கணக்கு பாடமா இருக்கலாம். அதுக்காக சரியா கணக்கு பண்ணலனு சொல்லிடாதீங்க. நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க. இது தான் முக்கியம். திடீர்னு தமிழ் பற்று வந்து வேதியியல் சரியில்லைனு சொல்லிடாதீங்க.

2. கோ-ஆர்டினேஷன் இல்லை (அ) சிங்க் இல்லை - இங்க வாய் தவறி சில்க் இல்லைனு சொல்லிடக் கூடாது. இதுக்கும் யாரும் காரணம் கேட்க மாட்டாங்க.

3. எக்ஸ்பிரஷன் சரியில்லை. இதுக்கு வந்து, டான்ஸ் நல்லா இருந்தது, ஆனா எக்ஸ்பிரஷன் மிஸ்ஸிங்னு சொல்லணும். இது பொதுவா நல்லா ஆடறவங்களுக்கு ஆப்பு வைக்க பயன்படுத்தலாம்.

4. கான்செப்ட் இல்லை - போட்டிக்கு எப்படியும் ஏதாவது கான்செப்ட் சொல்லுவாங்க. பழைய பாட்டு, குத்து பாட்டு, வெஸ்டர்ன், டூயட் இப்படினு. நல்லா டான்ஸ் ஆடினா, டான்ஸ் நல்லா இருந்தது கான்செப்ட் இல்லைனு சொல்லணும். நல்லா ஆடலனா கான்செப்ட் நல்லா இருந்தது, டான்ஸ் எங்கனு கேட்கனும். அதை கேட்டதும் அவுங்க அப்படியே தலை குனிஞ்சி நின்னுடுவாங்க. நாம கெத்து காட்டணும்.


இது எல்லாத்தை விட ரொம்ப சுலபமானது, ”எனக்கு பிடிக்கல. நீங்க நல்லா ஆடினீங்க. எல்லா ஜட்ஜுக்கும் பிடிச்சிருக்கு, ஆடியன்ஸுக்கும் பிடிச்சிருக்கு, என் வீட்டு நாய் குட்டிக்கு கூட பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு பிடிக்கல. எனக்கு டான்ஸ் தெரியாதுடா”. அப்படினு சொல்லிக் கூட மார்க் போடலாம். ஆனா அப்ப அழுகணும். இல்லைனா ஆட்டய விட்டு தொரத்திடுவாங்க.

இப்ப தனியா ஆடற டான்ஸ்க்கு ஜட்ஜா போனா என்ன எல்லாம் கமெண்ட்ஸ் கொடுக்கலாம்னு பார்க்கலாம்.

1. ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க - இது தைரியமா அடிச்சி விடலாம். அதை டான்ஸ் ஆடினவங்க கிட்டயே கேட்கலாம். ”ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க தானே? கரெக்டா இல்லையா”னு கேட்கனும். அவுங்களும் பப்பரப்பேனு பார்த்துட்டு என்ன பண்றதுனு தெரியாம, ஒரு வேலை நிஜமாவே எதையோ மிஸ் பண்ணிட்டமோனு நினைச்சி தலையை ஆட்டிடுவாங்க. ஊரே நம்மல பார்த்து, இவன் பெரிய ஆளுடானு நினைச்சிக்கும்.

2. எனர்ஜி குறைஞ்சிடுச்சி - இதுக்கு குசும்பனைக் கேட்டா இன்னும் தெளிவா விளக்கம் கொடுப்பாரு.

3. சாங் செலக்‌ஷன் - உங்க திறமைக்கு ஏத்த பாட்டு இது இல்லை. இன்னும் நல்ல பாட்டா செலக்ட் பண்ணிருக்கணும்னு சொல்லணும். எந்த பாட்டா இருந்தாலும் கவலைப் படாம சொல்லுங்க. கலந்துக்கறவங்களும் ரொம்ப பெருமையா காமிராவைப் பார்ப்பாங்க.

4. ஒரிஜினாலிட்டியை கெடுத்துட்டீங்க - பாதி பேர் பிரபு தேவா பாட்டைத் தான் ஆடுவாங்க. எப்படியும் அவரை விட நல்லா ஆடினாலும் நாம தைரியமா அடிச்சி விடலாம். அவர் எப்படி ஆடியிருந்தாரு, பாட்டோட ஒரிஜினாலிட்டியே கெடுத்துட்டீங்க அப்படினு அலப்பற கொடுக்கணும்.

இது எல்லாத்தையும் விட சுலபமானது, ”என்ன பண்ணீங்க??? I didnt expect this from you. ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க, சிங் இல்லை, சாங் செலக்‌ஷன் சரியில்லை. போன ரவுண்ட்ல எப்படி ஆடினீங்க. I expected more from you. I am totally disappointed" இப்படினு சொல்லி அந்தர் பண்ணிடணும். தொர இங்கிலிபிஸெல்லாம் பேசுதுனு எல்லாரும் அப்படியே மெர்சலாயிடுவாங்க. டான்ஸ் ஆடினவங்க சோகமா நடந்து போவாங்க. உடனே பேக் க்ரவுண்ட்ல ஒரு சோக மியூசிக் போட்டுடுவாங்க. அப்படியே அவுங்க அழாம போனா கூட தலைல ஒரு தட்டு தட்டி அழ வெச்சிடுவாங்க. நமக்கு கவலை இல்லை

No comments: