Tuesday, 27 January 2015

பேயை பார்த்து பயந்து அலறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக இருப்பவர் ஹாரீஸ் சோஹைல்.  இவர் தங்கியுள்ள அறையில் பேய் இருப்பதாக கூறி தனது அறையை மாற்றி தரும்படி அணி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து புதிய சர்ச்சை ஒன்றை எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்று பயணம் செய்து 2 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் வார்ம்-அப் போட்டிகளிலும் விளையாடி வருகிறது.  நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான கிரிக்கெட் அணியில் சோஹைல் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அணி வீரரில் ஒருவரான சோஹைல் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் நள்ளிரவில் திடீர் என்று பயந்து எழுந்துள்ளார்.  தனது அறையில் பேய் நடமாட்டம் உள்ளதாக அவர் பயத்துடன் அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.  இதனை அடுத்து அவர்கள் ஓட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து எடுத்து கூறி வேறு அறை ஒன்றை மாற்றி தருவதற்கு ஏற்பாடு செய்தனர்.

ஆனால், சோஹைலுக்கு அதற்குள் தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு விட்டது.  கடந்த காலங்களில் தங்களது நடத்தை காரணமாகவே பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கி கொண்டுள்ளனர்.  ஆனால், பேய் இருப்பதாக இதுவரை எந்தவொரு பாகிஸ்தானிய வீரரும் கூறியதில்லை.

நியூசிலாந்து நாட்டில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த முதல் வார்ம்-அப் போட்டியில், அந்நாட்டின் பிரசிடெண்ட் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் மோதிய பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.  போட்டியில் மிஸ்பா-உல்-ஹக் அடித்த சதம் வீணாகியது.  அவருக்கு காயம் ஏற்பட்டதால் 2வது வார்ம்-அப் போட்டியில் விளையாட மாட்டார் என்று அணி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் விளையாடாத ஹாரீஸ் சோஹைல் மற்றும் பிலாவர் பாட்டி ஆகிய இருவரும் இன்று நடைபெற உள்ள 2வது வார்ம்-அப் போட்டியில் விளையாட உள்ளனர்.  எனினும், இந்த போட்டியில் யாசீர் ஷா மற்றும் முகமது இர்பான் ஆகியோர் விளையாட மாட்டார்கள்.  வருகிற ஜனவரி 31ந்தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அவர்கள் விளையாடுவார்கள் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

No comments: