சிவகாசிக்கு வெடி வைக்கும் சீன பட்டாசுகள்
'கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை’ என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அந்தப் பழமொழி பட்டாசு விஷயத்தில் பொருந்தவில்லை. பட்டாசு உற்பத்திக்குப் பெயர்போன சிவகாசியிலேயே சீன பட்டாசுகள் அமோகமாக விற்பனை ஆவதுதான் வேதனை.
'கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை’ என்று கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். அந்தப் பழமொழி பட்டாசு விஷயத்தில் பொருந்தவில்லை. பட்டாசு உற்பத்திக்குப் பெயர்போன சிவகாசியிலேயே சீன பட்டாசுகள் அமோகமாக விற்பனை ஆவதுதான் வேதனை.
இந்திய பட்டாசு உற்பத்தியில் 90 சதவிகிதம் குட்டி
ஜப்பானான சிவகாசியில்தான் தயாராகிறது. 75 ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த
இந்தப் பட்டாசு தொழில்தான் சிவகாசி தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின்
வாழ்வாதாரம். ஓர் ஆண்டுக்கு சராசரியாக 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை பட்டாசு
வியாபாரம் நடக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் வருமானம்
அரசுக்குக் கிடைக்கிறது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்
சிவகாசியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கிக்
கிடக்கின்றன.
இதற்குக் காரணம்?
தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச்
செயலாளர் ஷியாம்சுந்தர், சீனியர் நிர்வாகிகள் மாரியப்பன், ஆசைத்தம்பி
ஆகியோரைச் சந்தித்துப் பேசினோம்.
''உலக அளவில் பட்டாசு உற்பத்தியில் சீனா முதலிடம்
வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் சிவகாசியில்தான் பட்டாசு
உற்பத்தி அதிகம். தரம் குறைவான, ஆபத்தான பட்டாசுகளைத் தயாரித்து, குறைந்த
விலையில் கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்து வருகிறது சீனா. கொள்ளை லாபத்துக்கு
ஆசைப்பட்டு வட மாநில மொத்த வியாபாரிகள், கப்பல்களில் அவற்றைக் கொண்டுவந்து
பதுக்கி ரகசியமாக விற்பனை செய்கின்றனர். சமீபத்தில் மும்பை துறைமுகத்தில்
10 கன்டெய்னர்களில் வந்து இறங்கிய சீன பட்டாசுகளை அதிகாரிகள்
பிடித்துள்ளனர்.
சீன பட்டாசுகள் பொட்டாசியம் குளோரைடு மற்றும்
பெர்குளோரேட் என்ற மூலப் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் விலை
கிலோ ரூ.40-தான். ஆனால், சிவகாசி பட்டாசுகள் அலுமினிய பவுடர், பொட்டாசியம்
நைட்ரேட், பேரியம் நைட்ரேட் என்ற மூலப் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றின்
விலை கிலோ ரூ.200. ஆனால், சீன பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மூலப்
பொருள்கள் மிகவும் ஆபத்தானவை. எளிதில் தீப்பற்றக்கூடியவை. சுற்றுப்புறச்
சூழலை மாசுப்படுத்துபவை. சிவகாசி பட்டாசுகளில் திரியில் தீ வைத்தால்தான்
வெடிக்கும். ஆனால் சீன பட்டாசுகளை கீழே போட்டால்கூட எளிதில் வெடிக்கும்.
சமீபத்தில் சீனாவில் பட்டாசு ஏற்றி வந்த லாரியில் பட்டாசு பார்சல்
உராய்வினால் தீ பிடித்து ஒரு பாலமே இடிந்து விழுந்து விட்டது. அதனால்தான்
அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீன
பட்டாசுகளுக்குத் தடை விதித்துள்ளன. ஆனால், அதையும் மீறி இந்த ஆண்டு
சீனாவில் இருந்து 2 ஆயிரம் கன்டெய்னர்களில் கள்ளத்தனமாகப் பட்டாசுகளை
இறக்குமதி செய்து வட மாநில வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ளனர். வழக்கமாக
விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு வட மாநில வியாபாரிகள் கோடிக்கணக்கில்
சிவகாசியில் ஆர்டர் கொடுப்பார்கள். இந்த ஆண்டு யாரும் ஆர்டர் கொடுக்க
வரவில்லை. இதனால் சிவகாசியில் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள்
தேங்கிக் கிடக்கின்றன. இதை மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனின்
கவனத்துக்குக் கொண்டுபோனோம். சீன பட்டாசுகள் தொடர்பாக, துறைமுகங்களில்
ரெய்டு நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், இந்திய துறைமுகங்களில் போதிய
ஸ்கேனர் வசதி இல்லை. அதனால் எளிதாக சீன பட்டாசுகள் இங்கு இறக்குமதி
செய்யப்படுகின்றன.
பட்டாசு உற்பத்திக்கு பெயர்போன சிவகாசியில்கூட சீன
பட்டாசுகள் விற்பனை கன ஜோராக நடக்கிறது. இந்தக் கொடுமையை எங்கே போய்
சொல்வது? சமீபத்தில் சீன பட்டாசுகள் வைத்திருந்த கணேசன் என்பவரைப் பிடித்து
போலீஸில் ஒப்படைத்தோம். சீன பட்டாசுகளை வாங்கி அந்த லேபிள்களைக்
கிழித்துவிட்டு தங்கள் நிறுவன லேபிள்களை ஒட்டி விற்பனை செய்கின்றனர்.
சீன பட்டாசுகள் இறக்குமதி தொடர்ந்தால் இன்னும் சில
ஆண்டுகளில் சிவகாசியில் பட்டாசுத் தொழிலே அழிந்துவிடும். 5 லட்சம்
தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சீன பட்டாசுகளை இறக்குமதி
செய்து விற்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து சிறையில் அடைத்தால்தான்
இந்தத் தொழிலைக் காப்பாற்ற முடியும்'' என்றனர்.
மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் துணைத் தலைமை கட்டுப்பாட்டு அலுவலர் குப்தாவை தொடர்புகொண்டு பேசினோம்.
''சீன பட்டாசுகள் கள்ளத்தனமாக இறக்குமதி செய்து
விற்கப்படுவதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். துறைமுகங்களில்
கன்டெய்னர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி
சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று எங்கள் துறைமூலம் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. சிவகாசி பட்டாசுக்
கடைகளில் சீன பட்டாசுகள் விற்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்து
வருகிறோம்'' என்றார்.
பட்டாசுத் தொழிலை நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வும் மத்திய, மாநில அரசுகளிடம்தான் இருக்கின்றன.
No comments:
Post a Comment