காதலில் தோற்றுக்கொண்டே இருக்கும் கிருஷ்ணாவுக்கு அது கைகூடும் நேரத்தில், தம்பி ஆனந்தின் பாசத்தால் இடையூறு ஏற்படுகிறது. காதல் வென்றதா, இல்லையா என்பதை விளக்குகிறார் இயக்குனர் ராஜ்மோகன். ‘ஆண்பாவம்’ பாண்டியராஜன் - பாண்டியன் போல அடித்துக்கொள்ளும் அண்ணன்-தம்பியாக கிருஷ்ணாவும் மா.கா.பா.ஆனந்தும் கலக்குகிறார்கள். ‘எங்கே போனாலும் ஏழரை, எப்படிப்பார்த்தாலும் ரகளை’ என்கிற அவர்களது கொள்கை ரசிக்க வைக்கிறது
நடிப்பில் தேறியிருக்கிறார் கிருஷ்ணா. எல்லாச் சுவைகளையும் இயல்பாய் காட்ட அவரால் முடிகிறது. இன்னொரு ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் மா.கா.பா.ஆனந்த் தனி ஹீரோவாக நடிக்கும் தகுதி பெற்றிருக்கிறார். விலகி விலகி, அப்புறம் கொஞ்சிப் பழகிப் பழகி காதலிக்கும் நாயகியாக மோனல் கஜ்ஜார் வசியப்படுத்துகிறார். மகளுக்காக அவமானப்படும் கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் மனம் தொடுகிறார். அவருக்குப் பக்கத்திலேயே நிற்கிறார் மீரா கிருஷ்ணன்.
இளைத்திருந்தாலும் நடிப்பில் கனம் காட்டுகிறார் எஸ்.பி.பி.சரண். தம்பி ராமையா சிரிக்கவும் அழவும் வைத்து சிறப்பு சேர்க்கிறார். அவருக்கு இணையாக வரும் கோவை சரளா, அவருக்கு நிகராக நிற்கிறார். தான் கலாய்க்கப் பட்டு, ரசிகர்களை கலகலக்க வைக்கிறார் சௌகார் ஜானகி. இறுதிக்காட்சியில் வந்துபோய், இடைவிடாமல் சிரிக்கவைக்கிறார் சந்தானம்.எம்.ஆர். பழனிக்குமாரின் கேமரா, படத்துக்குத் தேவையான வேலையை பக்குவமாகச் செய்துள்ளது. ரொம்ப மெனக்கெடாமல் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நான் ஸ்டாப் காமெடி வசனத்தாலும், காட்சி அமைப்பாலும் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் ராஜ்மோகன்.
No comments:
Post a Comment