Friday, 21 November 2014

10 நாள் பயணம் செய்து உலக தலைவர்களை சந்தித்தபோது பேசியது என்ன? பிரதமர் நரேந்திர மோடி தகவல்

3 நாடுகளில் 10 நாள் பயணம் செய்து, உலக தலைவர்களை சந்தித்தபோது பேசியது என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது வலைத்தளத்தில் எழுதி உள்ளார்.

3 நாடுகள் பயணம்

வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டுக்கொண்டு வருவதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி என 3 நாடுகளில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் 5 மாநாடுகளில் பங்கேற்றார். 38 உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

கருப்பு பணம் 

நாடு திரும்பியுள்ள நிலையில், உலக தலைவர்களுடனான தனது சந்திப்பு குறித்து அவர் தனது வலைத்தளத்தில் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்தும், அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவது பற்றியும் உலக தலைவர்களிடம் இந்தியா எடுத்து வைத்தது. இந்த பிரச்சினை, ஒரு நாட்டை மட்டுமே பாதிக்காது என்ற நிலையில், உலக தலைவர்கள் கவனத்தில் கொண்டது, எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

சீர்குலைத்து விடும் 


கருப்பு பணத்தை பொறுத்தமட்டில், அது உலக அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து விடும். கருப்பு பணம், பயங்கரவாதம், சட்டவிரோத பண பரிமாற்றம், போதைப்பொருள் வணிகம் ஆகியவற்றுக்கும் காரணமாகி விடும்.

இந்த பிரச்சினைக்கு எதிராக உலகளாவிய அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

வெற்றி 

ஜனநாயக நாடுகள் என்ற முறையில், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு, கருப்பு பணம் என்ற சமூக தீமைக்கு எதிராக அனைவரும் கூட்டாக போராட வேண்டிய கடமை உண்டு என்பதை சுட்டிக்காட்டுவதற்கு ஜி–20 உச்சி மாநாடு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.

இந்த மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில், இந்த பிரச்சினை குறித்து குறிப்பிட்டிருப்பது, நாம் வைத்த கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

உலக சமுதாயம் ஆர்வம் 

எனது பயணத்தின்போது, இந்தியா மீதான தங்களது மதிப்பை, மிகுந்த எழுச்சியுடன் உலகம் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது என்பதை நான் கண்டேன். இந்தியாவுடன் இணைந்து செயல்பட உலக சமுதாயம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது.

ஒவ்வொரு தலைவரை சந்தித்தபோதும், நமது உறவினை இன்னும் ஆழமாக, விரிவாக கொண்டு செல்வது குறித்து விவாதித்தோம். வணிகத்தை, வர்த்தகத்தை மேம்படுத்த ஆலோசித்தோம். இந்தியாவுக்கு தொழில் நிறுவனங்களை கொண்டு வர அழைப்பு விடுத்தேன். இதுதான் எங்கள் சந்திப்புகளில் முக்கிய பங்கு வகித்தது.

நம்பிக்கை 
இந்தியாவில் தயாரிப்போம் என்னும் நமது திட்டம் குறித்து நான் சந்தித்த தலைவர்களில் பலரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் இந்தியா வரவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை ஒரு சாதகமான அறிகுறியாக நான் பார்க்கிறேன். இந்தியாவின் இளைய தலைமுறையினருக்கு அவர்கள் வாய்ப்புகளை கொண்டு வருவார்கள். அவர்கள் ஒளிர்வதற்கான சரியான வாய்ப்பாக அது அமையும்.

உலகின் ஒவ்வொரு பகுதி தலைவரையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவர்களுடனான எனது சந்திப்பு திறந்த மனதுடன் கூடியதாகும். அது மட்டுமல்லாது, நல்ல பலனையும் தந்துள்ளது.இவ்வாறு அதில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

No comments: