Friday, 21 November 2014

தாஜ்மகால் யாருக்கு சொந்தம்? உ.பி. அமைச்சரின் பேச்சு

உத்தரபிரதேசத்தின் அமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான அசம்கான், ‘தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்:

இரண்டு முஸ்லிம்களின் சமாதி இடம் பெற்றுள்ள தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்த விரும்புகிறார்கள். எங்கெல்லாம் முஸ்லிம்களின் சமாதியும், நினைவிடங்களும் உள்ளனவோ அவை அனைத்தும் மத்திய வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மோசமான இடங்களாக இருந்தால் அது வக்பு வாரியத்திடம் இருக்கும். மிகவும் விலை மதிப்பு உடையது எல்லாம் மத்திய அரசுக்கு சொந்தமாகுமா? தாஜ்மகாலில் இருந்து வரும் வருமானத்தை முஸ்லிம் குழந்தைகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்த வேண்டும். அதனைக் கொண்டு இரண்டு பல்கலை கழகங்களை வக்பு வாரியத்தால் நடத்தி விட முடியும் என்றார்.
அசம்கானின் கருத்துக்கு லக்னோ இமாம் கலீத் ரஷீத்தும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அசம்கான் கூறியது போல தாஜ்மகால் முஸ்லிம்களின் உணர்வுகளுடன் கலந்த ஒன்றாகும். அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார். இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஷநவாஸ் ஹுசைன் கூறுகையில்:
தாஜ்மகால் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவிடமாகும். அது இந்திய தொல்லியல் துறையின் வசம் உள்ளது என்பது அசம்கானுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அசம்கான் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். தாஜ்மகால் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று தெரிவித்தார்.


தாஜ்மகாலை சன்னி முஸ்லிம்கள் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் உத்தரபிரதேச மந்திரி கோரிக்கையால் சர்ச்சை

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக் கரையோரம் அமைந்துள்ளது. இது மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக 1654–ம் ஆண்டு கட்டியதாகும். முழுவதும் சலவைக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட தாஜ்மகாலை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது தாஜ்மகாலின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதுபற்றி உத்தரபிரதேச மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி அசம்கான் கூறுகையில், ‘‘தாஜ்மகாலை மத்திய அரசு தொடர்ந்து தனது கட்டுப்பாட்டின் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. தாஜ்மகால் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. 

இதை முஸ்லிம்களின் கல்விக்காக செலவிட வேண்டும். இந்த பணத்தை கொண்டு 2 பல்கலைக்கழகங்களை நாட்டில் நடத்த முடியும். எனவே, தாஜ்மகாலை சன்னி முஸ்லிம்களின் மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்களே ஒரு நிஜாமை நியமித்து கிடைக்கும் வருவாயை முஸ்லிம்களின் கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள இயலும்’’ என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.அசம்கானின் கருத்தால் சர்ச்சை உருவாகி இருக்கிறது.இதுபற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கூறுகையில், ‘‘இது போன்ற கருத்துகள் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் குழப்பத்தையே ஏற்படுத்தும். தாஜ்மகால் விஷயத்தில் அரசியலை புகுத்துவது கண்டனத்துக்குரியது’’ என்றார்.


அன்று தாஜ்மஹாலை இடிக்க சொன்ன அசாம் கான் இன்று வக்புவாரியத்திடம் ஒப்படைக்க கோருகிறார்!


தாஜ்மஹாலை இடிப்பதற்கு தானே தலைமை தாங்குவேன் என்று கடந்த ஆண்டு கொக்கரித்த உத்தரப்பிரதேச அமைச்சர் அசாம் கான் தற்போது அதை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரப்பிரதேச மூத்த அமைச்சர் அசாம் கான் சர்ச்சைகளின் சங்கமமாக இருப்பவர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அதெப்படி பொதுமக்களின் வரிப்பணத்தில் ஷாஜஹான் தாஜ்மகாலை கட்ட முடியும்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? தாஜ்மஹாலை இடிக்கும் கும்பலுக்கு நானே தலைமை ஏற்பேன் என்று பேசி பஞ்சாயத்தை உருவாக்கினர். அதே அசாம் கான் தான் தற்போது, தாஜ்மஹாலை வக்பு வாரிய கட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தாஜ் மஹாலை மத்திய அரசு தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக தாஜ்மஹால் உள்ளது. 

இதில் கிடைக்கும் வருவாய் ஏழை முஸ்லிம்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும். மும்தாஜின் நினைவிடமான தாஜ்மஹால் உலக அதிசயத்தின் ஒன்றாக திகழ்ந்து மிகப் பெரிய வருவாயை ஈட்டுகிறது. இதை முஸ்லிம்களின் கல்விக்காக செலவிடுவதே நியாயமானது. இதன் மூலம் வரும் வருவாய் ஏழை சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பயன்பட வேண்டும். எனவே, தாஜ்மஹாலை சன்னி முஸ்லிம்களின் மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் வக்பு வாரியமே தாஜ்மஹாலுக்கான நிஜாமை நியமித்து, கிடைக்கும் வருவாயை முஸ்லிம்களின் கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள இயலும் என்று கூறியுள்ளார்.


No comments: