Monday, 6 October 2014

யான்

  யான்

பெற்றோரை இழந்த ஜீவா, தன் பாட்டியிடம் வளர்கிறார். தீவிரவாதிக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டை யில் துளசியை காப்பாற்றுகிறார். அந்த காப்பாற்று தலே காதலாகிறது. ‘ஒரு பொண்ணை பார்த்தா, உடனே காதலிச்சிடுவியா?’ என்று ஆரம்பத்தில் ஜீவாவை புறக்கணிக்கும் துளசி, இன்னொரு காப்பாற்றுதலின்போது காதல்கொள்கிறார்.‘பாட்டி சம்பாத்தியத்தில் வாழும் நீ, என் மகளை எப்படி காப்பாற்றுவாய்?’ என்கிறார், துளசியின் தந்தை நாசர். ‘நல்ல வேலையுடன், உங்கள் மகளை கல்யாணம் செய்துகொள்கிறேன்’ என்று சவால் விட்டு கிளம்பும் ஜீவாவுக்கு வேலை கிடைக்க வில்லை. வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்ட் வெங்கட் போஸ் மூலம், பஸிலிஸ்தான் நாட்டுக்கு வேலைக்கு செல்கிறார்.

அவரது லக்கேஜுடன் போதைப் பொருளை வைத்து அனுப்புகிறார் போஸ். போதை மருந்து கடத்தினால், கொடூர மரண தண்டனை விதிக்கும் பஸிலிஸ்தான்
நாட்டில் கைது செய்யப் படுகிறார் ஜீவா. அவரது தலையை வெட்டி, மரண தண்டனை அளிக்கும்படி தீர்ப்பு வருகிறது. அதிலிருந்து ஜீவா தப்பித்தாரா? துளசியை
கைபிடித்தாரா என்பது, பரபர கிளைமாக்ஸ்.காதல், சிக்கல், துரத்தல் போன்ற ஏரியாக்களில் ஜீவா ஸ்கோர் செய்கிறார். துளசியின் பின்னால் ஓடி அசடு வழிந்து, பிறகு அசரவைத்து அவரை காதலிப்பது; வெளிநாட்டில் மரண தண்டனை கைதியாகி, தப்பிக்க வழி தெரியாமல் கலங்குவது; தனது நாட்டில் இருந்து தப்பித்த பயங்கர தீவிரவாதியை புதிய நாட்டில் சந்திக்கும்போது, தூக்கு தண்டனை கைதி என்பதை மறந்து அவனைத் துரத்தி அழிப்பதிலான சேசிங் என, ஜீவாவின் திறமையும், கடின உழைப்பும் பிரமிக்க வைக்கிறது.துளசியின் அழகிலும், நடிப்பிலும் முன்னேற்றம். ஜீவாவைக் காப்பாற்றாமல் இந்தியா திரும்ப மாட்டேன் என்று தைரியமாக கிளம்புவது, சபாஷ். வெளிநாட்டில் தவிப்பது, சோகம். போஸ் வெங்கட், திடீர் வில்லனாகி இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், வழக்கமான போலீஸ். நவாப் ஷா, வழக்கமான வில்லன். இந்தியாவில் அர்ஜுன், வெளிநாட்டில் தம்பி ராமையா சிரிக்க வைக்கின்றனர். பிறகு கருணாகரனும் கவனிக்க வைக்கிறார்.

மனுஷ் நந்தனின் ஒளிப் பதிவு அசத்தல். தீவிரவாதிக்கும், போலீசுக்கும் நடக்கும் துப்பாக்கி சண்டைக்கு இடையே ஜீவாவும், துளசியும் தப்பிக்கும் புதுமையான காட்சி, பிரமிக்க வைக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை ஓ.கே. பாடல்களில் பழைய வாசனை.உலகையே மிரட்டும் ஒரு தீவிரவாதியை பஸிலிஸ்தானில் கண்டுபிடித்து விட்டேன் என்று ஜீவா தகவல் அனுப்பியவுடன், போலீஸ் அதிகாரி ஜெயப்பிரகாஷ் இந்திய நாட்டின் உதவியுடன் அந்த நாட்டுக்கு தகவல் தெரிவித்து அவனைப் பிடித்து, ஜீவாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அந்த நாட்டின் முக்கிய விருந்தினர்கள் சந்திப்பில் வில்லனை அடையாளம் காட்டியும் கூட, அந்த நாட்டு அரசாங்கம் அவரை கைது செய்யாதது ஏன்? கடுமையான சட்டங்கள் கொண்ட நாட்டிலிருந்து பாலைவனம் வழியாக ஒட்டகத்தில் தப்பித்துச் செல்வது எளிதான காரியமா? இந்த கேள்விகள் எழுந்தாலும், முற்பகுதியில் காதல், பிற்பகுதியில் ஆக்ஷன் என்று பிரித்து, பொழுது போக்க வைக்கிறார்கள்.

No comments: