Monday, 6 October 2014

தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்

தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்

வீட்டுக்கு அடங்காத விஜய் வசந்த், ரஸ்னாவின் காதலுக்கு அடங்குகிறார். ‘என் தேவதை’ என்று உருகி, ரஸ்னாவின் மனதைக் கரைக்கிறார். படிக்கும்போதே ரஸ்னா காதலிப்பது, அவளது தாய்மாமன் பவனுக்குப் பிடிக்கவில்லை. ஓடிப்போக திட்டமிட்ட இருவரையும், ‘நீங்க ரெண்டுபேரும் 15 நாள் தனியா வாழ்ந்து பாருங்க. உங்களுக்குள்ள புரிஞ்சிக்கிற பக்குவம் வந்தா, நானே உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். இல்லன்னா, நானே ரஸ்னாவை கட்டிக்குவேன்’ என்கிறார். உடனே காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, கொடைக்கானலில் உள்ள கிராமத்துக்கு செல்கிறார்கள்.

சொகுசாக வாழ்ந்த விஜய் வசந்த், கூலி வேலை பார்க்கிறார். சோம்பேறித்தனமாக வளர்ந்த ரஸ்னாவுக்கு வெந்நீர் வைக்கவும் தெரியவில்லை. விஜய் வசந்த் தன்னை அடிமையாக நடத்துவதாக ரஸ்னா நினைக்கிறார். குடும்ப வாழ்க்கைக்கு ரஸ்னா சரிப்பட மாட்டார் என்று விஜய் வசந்த் கருதுகிறார். இருவரும் பிரிந்துவிட தீர்மானிக்கிறார்கள். மீண்டும் பவனிடம் விஷயத்தை சொல்லிவிட்டுப் பிரிகிறார்கள். பிறகு பவனுக்கும், ரஸ்னாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. விஜய் வசந்தும், ரஸ்னாவும் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது, கிளைமாக்ஸ்.விட்டுக்கொடுத்தலும், யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதுமே காதல் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் ஒவ்வொரு ஷாட்டும் ஏதோ ஒரு படத்தில் பார்த்ததை நினைவுபடுத்துவதால், எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை. அதை துணுக்குத் தோரணமாக சிரித்துவிட்டு கடக்கிறோம். பிற்பாதியில் கொடைக்கானல் எபிசோடும், பிறகு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் எபிசோடும் மனதை நெகிழச் செய்கிறது.விஜய் வசந்தின் தோற்றத்துக்கு ஏற்ற கேரக்டர். நிறைவாக செய்திருக்கிறார். உருகி உருகி காதலிக்கும்போது ஏக்கத்தையும், எதற்கும் உதவாத காதலியை நினைத்து உருகும்போது துக்கத்தையும் சரியாக வெளிப்படுத்துகிறார். ரஸ்னாவுக்கு டப்பிங் குரல் கைகொடுக்கிறது. மற்ற கேரக்டர்களில், எல்லோருமே நாடகத்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். புஷ்பவனம் குப்பு சாமியின் வருகை, அருமை.ஒளிப்பதிவு, கொடைக்கானலின் அழகை காட்டும் அளவுக்கு சென்னையின் யதார்த் தத்தை காட்டவில்லை. நல்ல கதைக்களத்தை தேர்ந்து எடுத்தவர்கள், அதை சுவாரஸ்ய மாகச் சொல்ல தவறியிருக்கிறார்கள். பிற்பகுதியில் இருந்த அழுத்தத்துக்கும், நெகிழ்ச்சிக்கும் ஈடாக முற்பகுதியும் அமைந்திருந்தால், ‘தெ.உ.கா’ நிறைவான படமாக அமைந்திருக்கும்.

No comments: