கடனில் தவிக்கும் கால் டாக்ஸி டிரைவர் கருணாகரன். இட்லி கடை நடத்தும் விஜயலட்சுமியை காதலித்துத் திருமணம் செய்கிறார். கருணாகரனின் கடன், விஜயலட்சுமிக்குத் தெரிய வர, அவரை பிரிந்து விடுகிறார். இந்த நேரத்தில் கிரிக்கெட் சூதாட்ட புக்கி பாலாஜி, கருணாகரனின் காரில் பயணம் செய்கிறார். அவரிடம் தன் பணக்கஷ்டத்தை கூறுகிறார் கருணாகரன். தனக்கு இரண்டு நாள் கார் ஓட்டினால் கடனை அடைக்க உதவுவதாகச் சொல்கிறார். அதன்படி கார் ஓட்டுகிறார். காரில் பயணம் செய்தபடியே கிரிக்கெட் சூதாட்ட டீலிங்கை பேசுகிறார் பாலாஜி. மறுநாள் அவரை பிக்அப் பண்ண அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்குச் செல்கிறார். அங்கு பாலாஜி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். கருணாதான் கொலையாளி என்றும், அவருக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் பங்கிருக்கிறது என்றும் போலீஸ் கைது செய்கிறது. பிறகு கருணாகரன் என்ன ஆனார்? பாலாஜியை கொன்றது யார் என்பது மீதிக் கதை.
கிரிக்கெட் சூதாட்டத்தை மேலோட்டமாக எடுத்துக் கொண்டு அதற்குள் ஓர் அப்பாவி டிரைவர் மாட்டிக்கொள்கிற ஒன் லைனை வைத்து சிரிக்க வைக்கிறார்கள்.
கருணாகரன் ஹீரோவாக நடித்திருக்கிறார். பெரிய உருண்டை கண்களிலேயே பயத்தையும், அப்பாவித் தனத்தையும் காட்டி கால் டாக்ஸி டிரைவராகவே மாறியிருக்கிறார். இட்லி கடை விஜயலட்சுமி மீது வரும் காதலையும், பிரிவின் துயரையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கடன்காரர்கள் கதவை தட்டும் நேரத்தை வைத்தே யார் தட்டுகிறார்கள் என்று சொல்வது, இட்லி கடை விஜயலட்சுமியை அவர் கடை இட்லியை வாங்கிக் கொடுத்தே மடக்குவது என கிடைக்கிற கேப்பில் எல்லாம் சிரிக்க வைக்கிறார். விஜயலட்சுமி இட்லி கடைக்காரியாக நடித்திருந்தாலும் ஆள் அத்தனைப் பளிச்சென்று இருப்பது கேரக்டரை தனித்து நிற்க வைக்கிறது.
சிம்ஹா மொக்கை போலீஸ் அதிகாரியாக வருகிறார். புதுசு புதுசாக திட்டங்கள் போட்டு அது புஸ்ஸாகி போய், மேல் அதிகாரி கே.எஸ்.ரவிகுமாரிடம் திட்டு வாங்கும் காட்சிகள் கலகல ரகம். தன் மகனை வைத்து உப்புமா படம் எடுத்து அதை ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கும் நரேன், முதன் முறையாக காமெடி பண்ணியிருக்கிறார். அவரது மகனாக வரும் சூறாவளி ஹீரோவும் கலக்குகிறார். சூதாட்ட தரகராக வரும் பாலாஜி கச்சிதம்.ஷான் ரோல்டனின் பின்னணி இசை கச்சிதம். துவராகநாத் ஒளிப்பதிவு அழகு. கிரிக்கெட் வீரரின் காதலி போதையில் ரகசியத்தை உளறுவது, பாலாஜி சாகும் விதம், என்னதான் பணம் கொட்டினாலும் இரண்டு நாள் கார் ஓட்டுவதற்கு 12 லட்சம் தருவாகச் சொல்லும் புரோக்கர் என லாஜிக் இல்லாத போங்கு ஆட்டத்தையும் ஆடுகிறார்கள். என்றாலும் சிவாவின் காமெடி வசனத்தில் கலகலப்பாகச் செல்கிறது படம்.
No comments:
Post a Comment