அரண்மனைக்குள் ஆவியாய் அடைந்திருக்கும் பேய், அழகான இளம் பெண் மீது அமர்ந்துகொண்டு செய்யும் அட்டகாசங்கள்தான், ‘அரண்மனை’.பாழடைந்து கிடக்கும் ஜமீன் அரண்மனையை விற்க நினைக்கிறது வெளியூரில் செட்டிலாகிவிட்ட அந்தக் குடும்பம். இதற்காக அரண்மனைக்கு வந்து தங்குகிறார்கள். அங்கு நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கிறது. தங்கையை பார்க்க வரும் வக்கீல், இதன் பின்னணியில் உள்ள சீக்ரெட்டை ஆராய்ந்தால், பல சம்பவங்கள் தெரிய வருகிறது. கடைசியில் பேயை விரட்டி, அந்தக் குடும்பத்தையும் தங்கையையும் வக்கீல் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
பல படங்களின் சாயல் அரண்மனையில் ஆங்காங்கே தெரிந்தாலும் தனது பேய் காமெடி பிளஸ் பரபரக்கும் திரைக்கதையால் அதை மறக்கச் செய்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.
வினய் ஹீரோ என்றாலும் அவர் வேலையையும் சுந்தர்.சியே, செய்துவிடுவதால் அவருக்கான முக்கியத்துவம் அதிகமில்லை. ஹன்சிகாவுடனான அந்த பிளாஷ்பேக் காதலும் காட்சியும் அழகு. வினய்யின் டப்பிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.மொத்தப் படத்தையும் தனது உருட்டல் மிரட்டலால் தாங்கிப் பிடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. கண்களை உருட்டி அவர் பார்க்கும் காட்சியில், பற்றிக்கொள்கிறது பயம். பழிவாங்கும் கிளைமாக்ஸ் காட்சியில் அத்தனை ஆக்ரோஷம். ராய் லட்சுமி கவர்ச்சிக்காக வந்து போகிறார். அவரை சந்தானம் டாவடிக்க, அவருக்கு உதவுகிறேன் என்று சுந்தர்.சி வர, காதல் கைமாறும் காட்சிகளில் கலகலப்பு அதிகமாகிறது. இடைவேளையில்தான் என்ட்ரி ஆகிறார் ஹன்ஸ். இருந்தாலும் அவரைச் சுற்றியே கதை நகர்வதால் படம் முழுவதும் அவர் வருவது போல ஃபீலிங். காதலனைச்
சந்திக்கவிடாமல் தடுக்கும்போது தவிக்கிற தவிப்பில், கெஞ்சலில் அனுதாபம் அள்ளுகிறார். கோவை சரளாவும் மனோபாலாவும் ஏற்கனவே வயிற்றைப் பதம்பார்த்துக் கொண்டிருக்க, சந்தானம் தன் பங்குக்கு சாமிநாதனுடன் செய்யும் அலப்பறைகள் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அதுவும் பேயை பற்றிப் பேசிவிட்டு பேயிடம் அடிவாங்கும் காட்சிகளில் சிரிப்பு அடங்க நீண்ட நேரமாகிறது. ‘முருங்கைக்காய் சாப்பிட்டாதான் முறுக்கேறும்பாங்க. இங்க என்ன முருங்கைக்காய்க்கே முறுக்கேறுது’, ‘எல்லாரும் காதலிச்சுதான் பைத்தியமாவாங்க. இவன் பைத்தியமாகிகாதலிக்கிறான்’ என்பது போன்ற சந்தானம் பிராண்ட் டைமிங் காமெடிகள் படத்துக்குப் பலம்.அமைதியாக இருந்துகொண்டே ஷாக் கொடுக்கும் சரவணன், ‘காதல்’ தண்டபாணி, அரண்மனை வாரிசு சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா, சாமியார் கோட்டா சீனிவாசராவ்உட்பட ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம். அனைவரும் கச்சிதமானத் தேர்வு. யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் இருட்டில் பயத்தை வரவழைக்கிறது. பரத்வாஜின் பாடல்கள் இனிமை. அந்த அரண்மனை செட்டும், கிராபிக்ஸ் வேலைகளும் அருமை.படத்தில் ஏகப்பட்ட லாஜிக் முட்டல்கள். அதையெல்லாம் யோசிக்கவிடாமல் சிரிப்பு நம்மை ஜில் படுத்துவதால், குடும்ப டூர் அடிக்கலாம் இந்த அரண்மனைக்கு
No comments:
Post a Comment